Ads

விருது மூலம் கிடைத்த பணத்தை பள்ளிக்கே வழங்கிய நல்லாசிரியர்

 விருது மூலம் கிடைத்த பணத்தை பள்ளிக்கே வழங்கிய நல்லாசிரியர்

------------
பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் ஆசிரியர் காஜா முகைதீன்.
ஆசிரியப் பணியின் மீது காதலோடு பணியாற்றி வருபவர். ஆசிரியர் பணியையும் தாண்டி சூழலியல் சார்ந்தும் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். பேரிடர் காலங்களில் தனது பள்ளியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்கள் குடும்பங்களுக்கு உதவி செய்து வருபவர்.இவரின் அர்ப்பணிப்பு மிக்க செயல்பாடுகளால் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 60 இல் இருந்து படிப்படியாக உயர்ந்து தற்பொழுது 120 மாணவர்களுக்கு மேல் படித்து வருகிறார்கள்.ஆஸ்பெட்டாஸ் கொட்டகைக்குள் இருந்த இந்தப் பள்ளியை கஜா புயல் நிர்மூலமாக்கியது.



துரிதமாகச் செயல்பட்டு உடனடியாக கொட்டகையை சீரமைத்து பள்ளியை தொடங்க பெரும் முயற்சி மேற்கொண்டார். தலைமை ஆசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் பெரும் ஒத்துழைப்போடு இப்பொழுது கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தனியார் பள்ளியையும் மிஞ்சும் வகையில் வண்ணமயமான வகுப்பறை அமைக்கப்பட்டுள்ளது.இவர் நல்லாசிரியர் விருதுடன் தனக்கு வழங்கப்பட்ட தொகையை ஸ்மார்ட் வகுப்பறை அமைப்பதற்காக பள்ளி தலைமை ஆசிரியரிடம் வழங்கி விட்டார்.நேற்று 22.09.2021 தமிழ்நாடு அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் காஜா முகைதீன் அவர்களுக்கு பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமையில் நடைபெற்ற விழாவில் வட்டாட்சியர் த.சுகுமார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் இரா.வேம்பையன், பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சீ.கௌதமன் ஆகியோர் முன்னிலையில், ஆசிரியர்கள், ஆசிரியர் சங்க பிரதிநிதிகள், கல்விக்குழு பொறுப்பாளர்கள், கல்வியாளர்கள் நல்லாசிரியரை வாழ்த்திப் பேசினார்.


ஆசிரியர் காஜா முகைதீன் ஏற்புரை வழங்கினார்:

அவர் தனது ஏற்புரையில் "இந்த ஆண்டு நல்லாசிரியர் விருதுக்காக விண்ணப்பித்தவர்கள் நேர்காணல் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த நடைமுறை இதற்கு முன் நடைபெற்றதில்லை. நான் பெற்ற இந்த விருது எனது மாணவர்களுக்கானது.என்னை வளர்த்தெடுத்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், என்னை வழிகாட்டிய தலைமை ஆசிரியர்கள், சக ஆசிரியர் தோழமைகள், என்னுடைய செயல்பாட்டை சமூகத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டிய செய்தியாளர்கள் எல்லோருமாக சேர்ந்து இவ்விருதை நான் பெற காரணமாக அமைந்தார்கள். பெரும்பாலான நல்ல ஆசிரியர்கள் விருதுக்காக விண்ணப்பிப்பது இல்லை. நான் விண்ணப்பித்தேன் எனக்கு கிடைத்தது. விருதைப் பெற்ற பொழுது கிடைத்த மகிழ்ச்சியை விட அதைக் கொண்டாடிய நண்பர்களும் சக ஆசிரியர்களும் குறிப்பாக வட்டார கல்வி அலுவலர் ஐயா ரவிச்சந்திரன் உள்ளிட்ட வர்களின் வாழ்த்துக்களை பெற்ற பொழுது மிகவும் அகமகிழ்ந்தேன்" என்றார்.

முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் ச.சித்ராதேவி வரவேற்றார்,
நிறைவாக பள்ளியின் ஆசிரியர் பெ.ரேணுகா நன்றி நவின்றார்.