Ads

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - எல்லாவற்றிலும் ஏன் பெண்ணியம் பேசுறீங்க?

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - எல்லாவற்றிலும் ஏன் பெண்ணியம் பேசுறீங்க?

 படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.. 

எல்லாவற்றிலும் ஏன் பெண்ணியம் பேசுறீங்க? அப்படி என்ன பாதிப்பு?? உங்க இணையர் உங்களை சமமாதானே நடத்துகிறார்?? இந்த கேள்வி அம்புகள் பலமுறை என்னை நோக்கி எய்தப்பட்டிருக்கின்றன.

சரியான விளக்கம் பெற 30 ஆண்டுகள் பின்னோக்கி சென்று என்னை ஆய்வு செய்கிறேன். நகர்ப்புறத்தின் ஒதுக்கப்பட்ட பகுதியில் பின் தங்கிய நிலையில் வாழும் மக்கள் வசிக்கும் பகுதியில் நான் வாழ்ந்திருக்கிறேன். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை தவிர வேற்று சமூகத்தின் நிழல் கூட அங்கு பட்டதில்லை. ஆதலால் பெரிதாக சாதியப் பாகுபாட்டை அறிந்ததில்லை. ஆனால் பெண்ணிய பாகுபாட்டை அதிகம் உணர்ந்திருக்கிறேன்.பெண்ணாக பிறந்த ஒரே காரணத்தால் குடும்பம் ,சமூகம் என எல்லா இடங்களிலும் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை மிக அருகில் சந்தித்து  வளர்ந்திருக்கிறேன்.

நகர்ப்புறத்தின் ஒதுக்கப்பட்ட அந்த பகுதியில் வெளி உலகிற்கு தெரியாமல் முறைகேடான வாழ்க்கையை நடத்தும் சிலரை பார்த்திருக்கிறேன். அவர்களில் ஆண்கள் மிகக் கம்பீரமாக தெருவில் நடந்து செல்வதையும் , அந்த பெண்கள் மற்றவர்களுக்கு அஞ்சி ஒடுங்கி வாழ்வதையும் பார்த்திருக்கிறேன். அப்பெண்களைத் தகாத வார்த்தைகளில் திட்டித் தீர்க்கும் தெருமக்கள் அந்த ஆண்களை குற்றமற்றவர்களாக பார்க்கும் நிலை கண்டு கோபம் அடைந்திருக்கிறேன். சில காலங்கள் அனுபவித்து ஆண் விட்டுச் சென்ற நிலையில் உணவிற்கு வழியின்றி அப்பெண் இறந்த நிலையில் அவளை யாரும் தொடக் கூட முன்வராத நிலை என்னுள் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதுண்டு. 

சமூகத்தால் தவறு என்று சுட்டிக் காட்டப்படும் ஒரு செயலை ஆண் செய்யும்போது குற்றமற்ற பார்வையிலும் அதையே பெண் செய்யும் பொழுது மிகப்பெரிய குற்றமாகவும் பார்க்க சமூகத்திற்கு கற்பித்தவர்களே குற்றவாளிகள் என எண்ணினேன். பெண்ணின் மீது சமூகம் சுமத்துகின்ற இது போன்ற பல ஏற்றத்தாழ்வுகளை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தனிப்பட்ட முறையில் நான் பாதிக்கப்பட்டிருந்தால் மட்டுமே எனக்கு கோபம் வரும், குரல் எழுப்புவேன், போராடுவேன் என்பது சுயநலம். என்னை சுற்றியிருப்பவர்கள் பாதிக்கப்படுகிறார் கள் என்பது என்னையும் பாதிக்கும் என்பதே பொதுநலம். அந்த வகையில் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அப்போது நான் பள்ளி வயது மாணவி என்பதால் எனது சிந்தனை சரிதானா என்ற தெளிவு எனக்கு கிடைக்கவில்லை. எனக்கு மட்டும் தான் இது போன்ற சிந்தனை தோன்றுகிறதா என்று  குழம்பிய நாட்கள் அவை.பள்ளி வயதில் தந்தை பெரியார் பற்றி நான் அவ்வளவாக அறிந்திருக்கவில்லை சீர்த்திருந்த சிந்தனையாளர் என்று மட்டுமே அறிந்திருக்கிறேன். சீர்திருத்தம் என்ற வார்த்தையின் பொருள் அன்று அறியவில்லை.

10ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக எனது இணையரின் மூலமாக பெரியாரின் சிந்தனைகளை முதன் முறையாக வாசிக்கும் அனுபவம் பெற்றேன். அன்று தான் எனது அத்தனை கேள்விகளுக்கும் விடையும், எல்லாவற்றிலும் மாறுபட்டு நிற்கும் எனது சிந்தனை சரிதான் என்ற உணர்வும் கிடைக்க அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அன்றிலிருந்து பெரியாரை எனது குருவாகவும், அவரின் கொள்கைகளை வேதமாகவும் பின்பற்ற தொடங்கி, இன்றுவரை தொடர்ந்து வருகிறேன்.

எல்லாவற்றிற்கும் அறியாமைதான் காரணம். மனதின் அறியாமை இருளை அகற்றும் மாமருந்து பெரியாரின் சிந்தனைகள். ஏற்றத்தாழ்வான இந்த சமூகத்தின் மீது எனக்கிருந்த அளவுகடந்த கோபத்தை உந்துசக்தியாக கொண்டே நான் போராட எண்ணினேன். ஜீவனுள்ள சந்திப்பு எனும் பெயரிலான எங்களது அமைப்பும், நூலகமும், மாணவர்களுக்கான படிப்பகமும் எனது போராட்டத்தின் பகுதியை.... மாற்றம் வேண்டுமானால்  இன்னும் ஆழமாக இறங்கி செயல்பட வேண்டியுள்ளது.

(படம்:  பெண் ஏன் அடிமையானாள் எனும் பெரியாரின் சிந்தனைகளைத் தாங்கிய புத்தகத்தை எனது மாணவியிடம் வாசிக்க கொடுத்த தருணம்)

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது..