Ads

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - கிராமங்களில் உள்ள சத்துணவு கூடங்களைத் திறந்து குழந்தைகளின் உணவை உறுதி செய்யலாமே !

 படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - கிராமங்களில் உள்ள சத்துணவு கூடங்களைத் திறந்து குழந்தைகளின் உணவை உறுதி செய்யலாமே ! 

பள்ளியில் இன்று மதிய உணவு உண்டு கொண்டிருந்தேன். சன்னலின் வழியாக நான்கு குழந்தைகள் எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பதை கவனித்தேன். என்னை பார்க்கும் ஆவலில் வந்திருக்கிறார்கள் என்று எண்ணி கையசைத்து சிரித்தேன். 

அவர்களும் சிரித்தார்கள். பிறகு உண்ணுவதை தொடர்ந்தேன்.

அவர்கள் அங்கேயே நின்று கொண்டிருப்பதை அறிந்து உற்று கவனித்தேன். அவர்களது பார்வை என் மீதின்றி உணவின் மீது இருந்தது. அருகில் அழைத்து இருந்த உணவில் ஆளுக்கு ஒரு உருண்டை வழங்கினேன்.

 எனது தந்தை  சிதம்பரத்தின் அருகிலுள்ள கிராமப் பகுதியைச் சார்ந்தவர். இந்த  பகுதி மக்களில் சிலர் ஏழ்மை நிலையிலும் அதிகம் கல்வி கற்றவர்களாக இருப்பதை அறிந்து அவரிடம்  கேட்டேன். அதற்கு அவர் கூறியது அப்போது நினைவிற்கு வந்தது.

அன்றைய காலகட்டத்தில் சிதம்பரத்தின் நந்தனார் பள்ளி சுற்றியுள்ள கிராம மாணவர்களுக்கு கல்வியை மட்டுமன்றி மூன்று வேளை உணவையும் உறுதி செய்து கொண்டிருந்தது. 3 வேளை உணவுக்காக தொடர்ந்துதான் எங்களைப் போன்றோர் கல்வி கற்ற கதையென்று கூறினார். அதே பள்ளியில் பயின்ற எனது இணையரும் இவ்வாறே கூறியிருக்கிறார்.

இன்றும் உணவு தேவைக்காக கல்வியை நாடும் கிராம பகுதிகள் இங்கு இருந்து கொண்டுதான் இருக்கின்றன. அரசு சத்துணவை கொரனா காரணமாக பொருட்களாக வழங்கி வருகிறது. ஆனாலும் பிழைக்க வழித்தேடி பிறரின் தேவைக்காக நேரமின்றி உழைக்கும் பொருட்டு  ஒருவேளை உணவோடு வயிற்றை நிரப்பிக் கொள்ளும் மக்களும் இருக்கிறார்களே...

பள்ளி இயங்கிக் கொண்டிருந்த போது இவர்களின் குழந்தைகளுக்கு 2 வேளை உணவாவது உறுதியாக கிடைத்தது. தற்போது அது ஒரு வேளையாக மட்டுமே.

இது போன்ற பகுதிகளில் வகுப்பறை களைத் திறந்து கல்வியை உறுதி செய்வதை காட்டிலும் தேவையானது சத்துணவு கூடங்களைத் திறந்து குழந்தைகளின் உணவை உறுதி செய்தலாகும்.

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது..