Ads

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு ஆசிரிய சகோதரியின் பயண அனுபவங்கள் !

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு ஆசிரிய சகோதரியின் பயண அனுபவங்கள் ! 

 #குக்கூ_காட்டுப்பள்ளி

நீண்டகால எனது தேடலுக்கான விடையாய் அமைந்தது சமீபத்தில் நான் சென்ற பயணம்...
பயண அனுபவத்தையும், தேடலுக்கான விடையையும் பகிர்ந்து கொள்கிறேன்.
சிக்கலற்ற இந்த வாழ்வை வாழ்வதற்கு ஏன் இவ்வளவு சிரமப்படுகிறோம் என்பது எனக்குள் அடிக்கடி எழும் வினா... பணத்தின் தேவை அதிகரிப்புதான்
சிக்கலான வாழ்வின் அடிப்படை என்பது நாம் அறிந்ததே. எனவே பணத்தின் தேவையை குறைத்து சுயசார்புள்ளவர் களாக இன்றையச் சூழலில் வாழ்வதற்கு குழந்தைகளுக்கு பயிற்றுவித்தல் என்பது தான் எனது தேடலின் கரு..உணவு முறையையும், வாழ்க்கை முறையையும் மாற்றினால் பணத்திற் கான தேவை குறையும் என்பதை வாழ்ந்து காட்டி நினைவுபடுத்துகிறது குக்கூ காட்டுப்பள்ளி. முற்றிலும் வித்தியாசமாக சிந்திக்க வைத்த இந்த இடம்தான் சென்ற வாரங்களில் நான் பயணித்த யாவருக்குமான இடம்.

சுற்றுலா தளம் அல்ல...தேடல் மனம் கொண்டவர்களுக்கும் இயற்கை மீது தீராக்காதல் கொண்டவர்களுக்குமான இடம். குக்கூ குழந்தைகள் வெளி, குக்கூ காட்டுப்பள்ளி என்று முகநூல் பதிவுகள் வழியே மட்டும் அறிந்திருக்கிறேன். பயணிக்க வேண்டும் என்ற ஆசைக்கு உதவிய பேரன்பு தம்பி # மரியன் பிரிட்டோ அவர்களுக்கு நன்றி.ஜவ்வாது மலை அடிவாரத்தில் புளியானூரிலிருந்து 1 கி.மீ மண் சாலை யில் பயணிக்க காடு, மலை, அருவி, ஆறு என இயற்கையை அள்ளி அணைத்துக் கொண்டு பேரழகோடு நிற்கிறது குக்கூ காட்டுப்பள்ளி. இங்கே இயற்கைக்கு மட்டுமே இடம் உண்டு என்பதை அழுத்திச் சொல்வது போல் நுழைவாயிலில் நின்றிருந்த மரத்தாலான பெரிய வாயிற் கதவைத் திறந்து உள்ளே சென்றோம். ஆங்காங்கே மண்ணாலான ஓலை குடிசைகள் அமைக்கப்பட்டிருந்தன. எளிமையையும், அன்பையும் மட்டுமே சுமந்து திரியும் குக்கூவின் தன்னார்வலர் கள் நம்மை அன்புடன் வரவேற்று வழி நடத்தினார்கள். 


முன்பின் தெரியாதநபர்களிடம் இத்தனை அன்புடன் பழகும் மனிதர்களை முதன்முறையாக பார்க்கிறேன்.பயணக் களைப்பு, இரவு நேரப் பசி என இரண்டையும் உணர்ந்து முதலில் உணவருந்த அழைத்தனர். ஓலைக் கூரை வேய்ந்த குடிலும், சாணி மெழுகிய தரை யும், கரிப்புகை படிந்த அடுப்பங்கரையும் ரசம் சாதமும், கத்தரிக்காய் குழம்பும், வட்டமாய் அமர்ந்து சாப்பிடுவதும் எனது நினைவுகளை எங்கோ இழுத்துச் சென்றது இனம் புரியாத அழுகை வந்து தொண்டை அடைக்க பாதியில் நின்றது உணவு. 70, 80, 90 களில் வாழ்ந்தவர் களுக்கு புரியும். மார்கழி மாதக் குளிரில் மண் தரையில் பாய் விரித்து நான் தூங்கிய முதல் தூக்கம் சுகமளித்தது.தூக்கம் களைந்து அதிகாலைக் குளிரில் அமைதியான மனநிலையிலான நடை பயணமும், ஓடையின் சலசலப்பும், கூடவே பூச்சிகளின் ரீங்காரமும், பறவைகளின் சத்தமும் இசைமழையில் நனையவிட பனி கிரீடம் சூடிக்கொண்ட புற்களின் அழகும், எங்கு காணினும் விவசாயமும், கால்நடைகளும் என நீண்ட காலத்திற்குப் பிறகு நான் அனுபவித்த இனிமையான காலை பொழுது மகிழ்வித்தது.

தன்னார்வலர்கள் ஒவ்வொரு வரும் ஒவ்வொரு வேலையாக பகிர்ந்து உடல் உழைப்புடன் கூடிய எளிய வாழ்வியல் முறைகளை பின்பற்றி வருகின்றனர். சுற்றியுள்ள கிராமத்துக் குழந்தைகளுக்கு வாழ்தலுக்கான அடிப்படைக் கல்வியை தன்னார்வலர்கள் பலரும் இங்கு வந்து வழங்கி வருவது மிகவும் பாராட்டுக்குரியது.சிமெண்ட், தார் சாலைகளில் இருந்து விடுதலையாகி, தொலைபேசி யையும்,தொலைக்காட்சியையும் மறந்து மண்ணோடு உறவாடி மனிதர்களோடு நெருங்கிப் பழகி வாழத் தேவையான அனைத்தையும் நாமே உற்பத்தி செய்து வாழும் வாழ்க்கை சாத்தியமே என்று வழி சொல்லியது குக்கூ... இது புதியதான வாழ்வியல் முறை இல்லை. மறந்துவிட்ட தமிழர்களின் வாழ்வியல் முறைதான். இன்றும் கூட சிலர் இப்படியான வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டுதான் வருகிறார்கள். மீட்டெடுத்து அப்படியே வருங்காலத்திடம் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய தேடல்...

காலமாற்றம் அவசியம்தான். ஆனால் அந்த மாற்றம் எதை நோக்கி நம்மை அழைத்துச் செல்கிறது? யாரு க்காக அழைத்துச் செல்கிறது ? என்பதை நாம் உணர வேண்டிய நேரமிது.. இயற்கையை அதிகம் சுரண்டுவது தான் மாற்றம் எனில் அப்படியான மாற்றம் அழிவை நோக்கி தான் நம்மை இட்டுச் செல்லும் என்ற புரிதல் அனைவருக்கும் வேண்டும்.விடைபெறுகையில் "அடிக்கடி வந்து போங்க" என்று அவர்கள் உதிர்த்த வார்த்தை என்றோ, எங்கோ கேட்டதாக நினைவில் ... அழிவின் உயிர்ப்பை ஆர்வத்துடன் செய்துவரும் மகத்தான மனிதர்களான அண்ணன் சிவராஜ் மற்றும் உடனிருந்து செயல்படுத்தும் தன்னார்வலர் கள் அனைவருக்கும் எனது பேரன்பையும் நன்றியையும் உரித்தாக்குகிறேன்....

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது..