Ads

படித்ததில் பிடித்தது - தமிழகப் பள்ளிச் சூழல் எதார்த்தம் (A3 JOURNEY ...அசத்தும் அரசுப் பள்ளிகள்)

படித்ததில் பிடித்தது - தமிழகப் பள்ளிச் சூழல் எதார்த்தம் (A3 JOURNEY ...அசத்தும் அரசுப் பள்ளிகள்)

இந்த மாதம் #புதிய_ஆசிரியன்  இதழில் எனது கட்டுரை .  ஆசிரியர் குழுவிற்கு நன்றி

கடந்த இரு மாதங்களாக, புதிய ஆசிரியன் இதழில்  வெளியான கல்வி தொடர்பான கோரிக்கைகள் குறித்து வாசித்திருப்பீர்கள். அவற்றிற்கும் செப்டம்பர் முதல்  நாள்  பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. ஆம் , #சுவடு_இதழும்  A3 #அசத்தும்_அரசுப்_பள்ளி_ஆசிரியர்கள் குழுவும் இணைந்து நடத்திய இணைய வழிக் கலந்துரையாடலின் அடிப்படையில் கல்வியாளர்கள் , கல்வி ஆர்வலர்கள் ஆசிரியர்கள் , பெற்றோர்கள் உள்ளிட்ட அனைவருடனும் உரையாடியதிலிருந்து தமிழக அரசு , பள்ளிக் கல்வித் துறை , ஊடகங்கள் , அரசியல் கட்சிகள் ஆகிய அனைத்து தரப்பினருக்கும் கோரிக்கைகள் வைத்தோம் .  பள்ளித் திறப்பில் கல்வித் துறை அமைச்சர் மற்றும் முதல்வரின் ஆலோசனைகளுக்கு இந்தக் கோரிக்கைகள் நிச்சயமாக  துணை செய்திருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது. , ஏனெனில் இதில் குறிப்பிட்ட 20 க்கும் மேற்பட்ட  கோரிக்கைகளில் பலவற்றையும் கல்வித் துறையில் கடந்த சில வாரங்களாக நடைமுறைப்படுத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் , பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் , பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் அனைவகுக்கும் புதிய ஆசிரியன் இதழ் வழியாக மிகுந்த நன்றியை உரித்தாக்குகிறோம். 

அடுத்து , செப்டம்பர் முதல் தேதி முதல் கடந்த ஒரு மாதமாக உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருக்கின்றனர். துறையின் வழிகாட்டுதல்களாலும் அரசின் ஆணைகளாலும் மட்டுமில்லாமல் ஆசிரியர்கள் தங்கள் இயல்பினாலேயே கொரோனா  சூழலிலிருந்து   பாதுகாக்க  மாணவர்கள் மீது கவனம் செலுத்தி பள்ளிகளில் அவர்களை அரவணைத்து வருகின்றனர் என்பது கண்கூடு.  பெரும்பாலும்   90% த்திற்கும்  அதிகமாகவே மாணவர்கள் பள்ளிக்கு வருகை புரிகின்றனர். இருப்பினும்  ஈரோடு , திருப்பூர் போன்ற இன்னும்  சில மாவட்டங்களில் ஆசிரியர்கள் கூறும் செய்திகள் வருத்தத்திற்குரியதாக உள்ளது.  கடந்த கல்வியாண்டில்  குடும்பப் பொருளாதாரத்திற்காக வேலைக்குச் சென்று பணம் சம்பாதிக்க ஆரம்பித்த மாணவர்கள் இப்போது பள்ளிகளுக்கு வருவதில்லை. ஆகவே அப்படியான சில இடங்களில் 70% க்கும் குறைவான வருகை சதம் இருப்பதாகக் தெரிகிறது. இவையனைத்தும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டும் தான். தனியார் பள்ளிகளில் இணைய வழிக் கல்வியையே பெற்றோர்கள் விரும்புவதாகவும்  பலபள்ளிகளும்  அதையே தொடர்வதாகவும் ஊடகங்கள்  செய்திகள் வெளியிடுவதின் பின்னணியையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும். 

அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஏற்கனவே   ஜுன் மாதம் மூன்றாவது வாரத்திலிருந்தே ஆசிரியர்கள் தினமும் பள்ளிக்கு வருகை புரிந்தும்,  நிர்வாகப் பணிகள் உள்ளிட்ட பல பணிகளைத் தொடர்ந்து செய்தும் வருகின்றனர். அது மட்டுமல்ல பெரும்பான்மையான உயர் நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கடந்த ஆண்டு முதலே இணைய வழிக் கல்வியில் மாணவர்களை ஈடுபடுத்தி கற்றல் - கற்பித்தல் தொடர்பில் வைத்திருக்கும்  நேர்மறையான சூழலே நிலவி வந்தது. 

9 , 10 வகுப்புகள் மட்டும் பள்ளிக்கு வர வைத்ததால் 6,7 ,8 வகுப்புகளுக்கு இணைய வழிக் கல்வியில் தொடர்வதும் கல்வித் தொலைக் காட்சியைப் பார்க்க வைக்க முயற்சிப்பதும் என ஒரு புறம் கூடுதல் பணிச்சுமையே. மாணவர்களை வகுப்புக்கு 20 எனப் பிரித்து அமர வைத்து காலை 9- 30 முதல் 3.30 வரை அவர்களுடனே இருப்பது , அதே நேரத்தில் 6 - 8 வகுப்புகளின் ஒப்படைப்புகளை சேகரிப்பது ,சிறு தேர்வுகள் வைப்பது

என மிக அழுத்தமான சூழ்நிலை நிலவுகிறது .  இவை அனைத்தும் கூட பிரச்சனை இல்லை. ஆனால் எல்லாவற்றுக்கும் பதிவேடுகளைத் தயாரிக்க மிகவும் அழுத்தம் தரப்படுவதை எண்ணி ஆசிரியர்கள் கூடுதல் மன அழுத்தத்திற்கு உட்பட்டுள்ளனர். மாணவர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளில் இது இன்னும் அதிகம். 

கல்வித் தொலைக்காட்சியில் கற்பிக்கப்படும் பாடங்களையே ஆசிரியர்கள் பாடக் குறிப்பேட்டில் எழுதி தலைமை ஆசிரியரிடம் கையொப்பம் பெறுதல் அவசியம் என்பது போன்ற முறைகள் ஆசிரியர்களின் கற்பித்தல் சுதந்திரத்தை வெகுவாக பாதிக்கின்றன. 

கற்றல் நிலையிலும் கற்பித்தல் முறையிலும் பல்வேறு இடைவெளிகள் இருக்கும் போது பதிவேடுகள் வழியாக மட்டுமே ஆசிரியர்கள் பணியாற்றுவதை உறுதி செய்யும் நடைமுறைகள்  ஏற்புடையனவே அல்ல என்பது உண்மையாகக் களத்தில்  கற்பித்தலை எடுத்துச் செல்லும் ஆசிரியர்களது வருத்தமாக இருக்கிறது. 

கடந்த ஆண்டை விட தற்போது  -மறைமுகமான அச்சுறுத்தல்கள் ஆசிரியர்களுக்கு பல நிலைகளில் உருவாகியுள்ளன. பள்ளிகள் திறப்பு ஆரம்பித்து அன்றாடம் பார்வையிட வரும் உயர் அலுவலர்கள் சாதாரணமாக வந்தாலும் , அடுத்தடுத்த நிலையிலிருக்கும் அலுவலர்கள் வழியாகத் தலைமை ஆசிரியர்களுக்கும் 

தலைமை ஆசிரியர்கள் வழியாக ஆசிரியர்களுக்கும் தரப்படும் அழுத்தங்கள் கூடுதலாக ஆசிரியர்களை மனப் பிரச்சனைகளுக்கு ஆளாக்கியுள்ளன. 

இயல்பான சூழ்நிலை இல்லாத கொரோனா சூழலில் அதனைக் காட்டிலும் இயல்பற்ற பதற்றச் சூழலில் தான் இன்றளவில் பள்ளிகள் இயங்கி வருகின்றன. ஏனெனில் மாணவர்களின் முழுமையான பாதுகாப்புக்கு 200 % பொறுப்பேற்க வேண்டிய சூழலில் ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் இருக்க , கற்பித்தலில் சுதந்திர மற்ற சூழலும் கூடவே சேர்ந்து கொண்டது. 

ஒப்படைப்புகள்(Assignment) வழங்கக் கூறி SCERT வழியே  இணைய வழியில் வரும் செயல்பாட்டை மாணவர்களுக்குத் தர வேண்டும் என்று அவ்வப்போது சில அறிவுறுத்தல்கள் முதன்மைக் கல்வி அலுவலர் வழியே  தலைமை ஆசிரியர்கள் ஆசிரியருக்கான வாட்ஸ் அப் குழுக்களில் பகிர , உடனடியாக மாணவர்களுக்கு அவை அனுப்பப்பட்டு பெற்றோர்கள் பள்ளிகளில் கொண்டு வந்து ஒப்படைக்கக் கூறப்பட்டனர். ஒரு புறம் அன்றாடம் பள்ளிகளில் மாணவரது பெற்றோர்கள் வந்த வண்ணம் இருப்பதும் மாணவர்கள் வருவதும் பதிவேடுகள் பராமரிக்கப்படுவதும் தொடர்கிறது . இப்படி அன்றாடம் அவர்களைக் கட்டுப்படுத்தி ஒப்படைப்புகளைப் பெறுவது எனத் தொடர்வதற்கு 6-8 வகுப்புகளுக்கும் பள்ளி திறந்து விடுவதே சாலச் சிறந்தது. 

மற்றொருபுறம்  EMIS வலைதளத்தில்  மாற்றங்கள் , மாணவர் விபரங்கள் எனத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கு கட்டளைகள் வந்த வண்ணம் உள்ளன. உயர் தொழில் நுட்ப ஆய்வகத் கணினிப் பயிற்சி ஒரு வாரம் தரப்பட்டது. அவற்றிற்கு 10 / 15 ஆசிரியர்கள் போகும் போது மாணவரைக் கண்காணிப்பது (பெரிய பள்ளிகளில் ) சிரமமாக இருந்த சூழலையும் சந்தித்து வருகின்றனர் ஆசிரியர்கள் . தற்போது பத்தாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு கண்காணிப்பாளராகவும் தேர்வுப் பணி ஆணைகள் சில இடங்களில் .

கற்பித்தலில் பன்முகத் திறனை வளர்ப்பதைக் காட்டிலும் கணினி , அலைபேசி இவற்றைப் பயன்படுத்துவதிலும் பதிவேடுகள் பராமரிப்பதிலும் ஆசிரியர்களது பன்முகத் தன்மையை வளர்க்கும் சூழல் உருவாகியுள்ளது .

ஒரு ஆசிரியருக்கு 4 பாடங்கள் எனில் நேரடி வகுப்புகளைக் காட்டிலும் இணைய வழி , நேரடி வகுப்பு இரண்டிலும்  மாணவர்களைக் கையாள்வது வெகு சிரமமாக உள்ளது. ஏனெனில் வாரத்தில் 6 நாட்களும் பள்ளி வேலை நாட்கள் . மாணவர்களுக்கு 3.30க்கு முடிந்தாலும் ஆசிரியர்கள் பழைய முறையில் 4.15  (அ) 4.30க்கு தான் வீட்டிற்குக் கிளம்புகின்றனர்.  

உதாரணமாக , 2 வகுப்பு மாணவர்களைப் பள்ளியில் நேரடி வகுப்பில் சந்தித்ததையடுத்து  வீட்டிற்குச் சென்ற பிறகும் மீதமுள்ள 2 வகுப்புகளை  வாட்ஸ் அப் குழுக்களில் கண்காணித்து , கற்பித்தல் _ கற்றல் பணிகள் நடப்பது , மாணவர்கள் கேட்கும் சந்தேகங்கள் என இரவு 11 வரை கற்பித்தல் சார்ந்த பணிகள் நீள்கின்றன . பெண் ஆசிரியர்களுக்கு வீடு – குடும்பப் பொறுப்பு , இணைய வழி வகுப்பு, நேரடி 

வகுப்பு என சொல்ல முடியாத இன்னல்கள் என்றே கூறலாம் .

எல்லா ஆசிரியர்களுக்கும் இப்பிரச்சனை இல்லை .உயர் நிலை ,மேல்நிலைப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே  இத்தகு சவால்களை சந்திக்கின்றனர். தொடக்கப் பள்ளி , நடுநிலைப் பள்ளிகளில் இவ்வளவு அழுத்தம் கிடையாது என்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு நேரடி வகுப்பும் கிடையாது , இணைய வழி வகுப்புகளும்  முழுமையாகக் கிடையாது. . நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 2 ஆண்டுகளாக கல்விப் பக்கம் தலைகாட்டாத மாணவர்கள் நேரடியாக 9 ஆம் வகுப்பிற்கு வந்துள்ளனர். இனி அவர்களைப் பொதுத் தேர்வு அல்லது கற்றல் திறன்களில் தகுதியுடையவராக மாற்றவும் இதே  உயர் , மேல்நிலைப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் தான் போராட வேண்டியிருக்கும் என்கிறார்கள் களத்தில் உள்ளவர்கள். 

இது மட்டுமல்லாது 9 , 10 வகுப்புகளுக்கு நேரடியாகப் பாடத்திற்குச் செல்லாமல்  அடிப்படைத் திறன்கள் தரும்  (refreshment course material) கட்டகங்கள் 45 நாட்களுக்குக் கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்கள் அதையே  பின்பற்றி வருகின்றனர். ஆனால் பள்ளி திறப்புக்கு முன்பு அதே குழந்தைகளுக்கு பாடப் புத்தகத்தில் உள்ள பாடங்களை நடத்தியது , ஒப்படைப்புகளைத் தந்தது , கூகுள் மீட்டில் வகுப்புகள் எடுக்க வலியுறுத்தியது ,அலகுத் தேர்வுகள் நடத்தி அவற்றை அலைபேசியிலேயே திருத்தம் செய்ய வைத்து மீண்டும் குழந்தைகளை தேர்வுத் தாள்களைக் கொண்டு வரச் செய்தது , அலைபேசியிலேயே PDF வடிவிலேயே திருத்தி முடித்திருந்தால் அதை நகல் எடுத்து வர வைப்பது ( ஒரு பாடத்திற்கு 10 பக்கம் எனில் 10 ரூபாய்.... 5 பாடங்களுக்கு 50 ரூபாய்  ) என குழப்பங்கள்  .....

கூடுதலாக , பள்ளிக் கல்வி ஆணையரது பெயரைக்  கூறியும் துறையின் உயர் அலுவலர்களது ஆணை என அன்றாடம் அச்சுறுத்தல்கள் . ஆனால் இவை பற்றிய எவ்வித உரையாடல்களும் இல்லாமல் இறுக்கமான நடைமுறைகளைப் பள்ளிகள் நகர்த்துகின்றன. பொது மக்கள் பார்வையிலும் ஆசிரியர்கள் வேலையே வதில்லை என்ற விமர்சனங்களே மேலோங்கி இருக்கின்றது.

எதிர்த்துப் பேசுவதாக இல்லாமல் சூழலை அணுகுமுறைகளை நெகிழ்வுடன் கொண்டு சென்றால் தான் இனி வரும் காலங்களில் கற்றல் கற்பித்தல் பள்ளிச் சூழல்கள் தென்றல் காற்றாக வீசும் .... இப்படியே போனால் எதிர்வரும் சமுதாயத்திற்கு இழப்புகளே மிஞ்சும். 

உமா