படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - #வன்முறைகளும் அத்துமீறல்களும் (வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு)
#வன்முறைகளும்அத்துமீறல்களும்
குழந்தைகள் மீதான வன்முறைகளும், அத்துமீறல்களும் தொடர்ந்து நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. மீடியாவில் வெளிவருவது வெகு சில மட்டுமே. தனது சொந்த வீடுகூட பாதுகாப்பான இடமாக இல்லாத நிலையில் வாழும் குழந்தைகளுடன் பயணிக்கிறேன் என்பதால் நானறிவேன்
குழந்தைகளுக்கு எதிரான அத்துமீறல்கள் அந்த சமயத்தில் மட்டும் பேசுபொருளாக இருப்பதும், பிறகு நாம் அதனை கடந்து செல்வதும் இதற்கான தீர்வாகாது. இவ்வாறு நிகழ்வதற்கான அடிப்படை காரணங்கள் குறித்த புரிதல் அனைவருக்கும் வேண்டும். குழந்தைகள் பாதுகாப்பு என்பது அனைவரின் பொறுப்பாக மாறவேண்டும்.
வலியவன், எளியவன் மீது செலுத்தும் அதிகாரப்போக்குதான் சமூகத்தின் அனைத்து அவலங்களுக்கும் அடிப்படையாகிறது. ஒருவன் தன்னை சாதி, சமயம் , பாலினம், பொருளாதாரம் பணி நிலை ஆகிய ஏதோ ஒன்றின் அடிப்படையில் உயர்வாக கருதிக் கொண்டு தனக்கு கீழ்நிலையிருப்பதாக கருதுவோரிடம் அத்துமீறலை நிகழ்த்து கின்றான். அவனுள் இருக்கும் ஆதிக்க சிந்தனை அத்துமீறலைத் தூண்டுகிறது. அவர்களைக் குரலற்றவர்களாக எண்ணி பயமின்றி வன்முறையில் ஈடுபட துணிகிறான்.
முதலாளி - தொழிலாளி , ஆண் - பெண் ஆசிரியர் _ மாணவர்,அதிகாரி - ஊழியன் பணக்காரன் - ஏழை போன்ற இடங்களில் அதிகாரமிக்கவன் துன்புறுத்துகிறான். இந்த அடிப்படையில் தான் பாதுகாப்பு வழங்க வேண்டிய நிலையில் இருக்கும் காவல்துறையினரும் , ஆசிரியர்களும் தன்னை நம்பி வருபவர்களைத் தனக்கு கீழ் கட்டுப்பாட்டில் இருப்பதாகக் கருதிக் கொண்டு அதிகாரத்தை பயன்படுத்தி பயமின்றி அத்துமீறலை நிகழ்த்துகின்றனர்.
பேருந்து பயணத்தில் கவனித்து இருக்கலாம்.. அழுக்குச்சட்டையை அதட்டும் நடத்துனரின் குரல் வெள்ளை சட்டையிடம் அடங்கி ஒலிப்பதை...
ஒவ்வொரு மனிதனும் தனக்கு நிகரானவன் என்பதை ஒவ்வொருவரும் தனது மூளையில் பதிவு செய்யாத வரை உலகில் வன்முறைகளும், அத்துமீறல்களும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கும்..
படித்தல் மிகவும் பிடித்த/ சமூக அக்கறை கொண்ட செய்தி - சமூக அக்கறையோடு பதிவிட்டுள்ள இந்த செய்தி அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற முகநூல் ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.