படித்ததில் மிகவும் பிடித்த/ சமூக அக்கறை கொண்ட செய்தி - வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற அமைப்பு மூலம் சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஆசிரியை !!
'நான் சிரித்தால் தீபாவளி... ' என்ற பாடலுக்கு 2 ம் வகுப்பில் நாங்கள் ஆடிய நடனத்தின் புகைப்படம் இது. இன்று ஏதோ ஒன்றைத் தேட பார்வையில் பட்டது. இந்த பாடலுக்கு சிரித்துக் கொண்டே ஆட வேண்டும் என்பது ஆசிரியரின் கட்டளை. ஆனால் நான் சிரிக்க முடியாமல் அழுது கொண்டே ஆடினேன். இன்றளவும் நினைவில் இருந்து நீங்காத அளவிற்கு ஆழமான வடுவாக மனதில் பதிந்திருக்கிறது.
ஒவ்வொருவரின் போராட்டங்களுக்கு பின்பும் வலி மிகுந்த அவமானங்கள் நிச்சயம் இருக்கும். போராடுவதற்கான அவசியமும், வலிமையும் அங்கிருந்தே பிறந்திருக்கும்.அரசுப்பணியில் அலுவலக உதவியாளராக தந்தை பணிபுரிந்த ஆரம்ப காலமது.. வசதி வாய்ப்பு குறைவாக இருந்த நிலையிலும் ஆங்கிலப் பள்ளியில் என்னை சேர்த்துப் படிக்க வைத்தார். ஊரின் பிரபலமான தனியார் பள்ளி அது. அன்றைய தினம் பள்ளி ஆண்டு விழா. என்னையும் சேர்த்து அந்தப் பாடலுக்கு நடனமாட 4 பேர் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தோம்.பட்டுப்பாவாடை போன்ற புதிய ஆடை அணிந்து வரவேண்டும் என்று முதல் நாளே ஆசிரியர் சொல்லிவிட்டார். மாதக் கடைசி என்பதால் தந்தையிடம் புத்தாடை வாங்க பணம் இல்லை. என்னிடம் இருப்பதிலேயே நல்ல ஆடையை அம்மா அணிவித்து அனுப்பிவிட்டார். அம்மா நிறை மாதம் என்பதால் விழாவிற்கு என்னுடன் வரவில்லை. அப்பாவும் அலுவலக வேலை காரணமாக வர இயலாத சூழல்..
எனது ஆடை ஆசிரியருக்கு திருப்தி அளிக்கவில்லையென்பதால் நிகழ்ச்சி முடிந்த வேறு ஒரு மாணவியின் ஆடையை வாங்கி அணிவித்து விட்டார். பெற்றோருடன் வரவில்லை என்பதாலும் நகையேதும் அணிந்து வர வில்லை என்பதாலும் ஆசிரியர் கோபித்துக் கொண்டார். அந்த ஆடையை அணிவித்த மறுநிமிடமே மாணவியின் பெற்றோர் வந்து ஆடையை கழற்றி தருமாறு ஆசிரியரிடம் சத்தம் போட்டார்கள்.2ம் வகுப்பு பயிலும் சிறுபிள்ளை என்பதாலும், உடன் யாரும் இல்லாததாலும் நான் மிகவும் பயந்து அழுதுவிட்டேன். ஆசிரியை, அவர்களிடம் மிகவும் கெஞ்சி என்னை மேடைக்கு அனுப்பி வைத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக ஆடி முடித்த அடுத்த கணமே ஆடையை கழற்ற சொல்லியும், இனி இந்த ஆடை எதற்கும் பயன்படப் போவதில்லை என்று நான் பிறந்த சமூகத்தின் அடிப்படையில் காரணம் காட்டி ஆசிரியரை வசை பாடினார்கள்.
விழாவிற்காக கூடிய கூட்டத்தில் நான் அணிந்து வந்த ஆடையையும் யாரோ எடுத்துக் கொண்டு செல்ல, அலுவலகம் முடிந்து தந்தை வரும்வரை ஆடையின்றி சக மாணவர்கள் முன்னிலையில் குறுகி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தேன் பள்ளியின் துப்புரவு பணியாளரம்மா தான் அப்பா வரும் வரை என்னை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்.இந்தப் புகைப்படத்தை பார்க்கும் போதெல்லாம் அந்த வழி மனதை அழுத்தும். அதன்பிறகு வாழ்வில் எத்தனையோ அவமானங்கள், வலிகளை இயல்பாக கடக்க வாழ்க்கை பழக்கப்படுத்தியிருந்தாலும் இந்த நினைவு மட்டும் ஆறாத வடுவாக உடன் பயணிக்கிறது. சிறுவயதில் ஏற்பட்ட இந்த அனுபவத்தின் அடிப்படையில் தான் இப்பொழுதும் எனது பள்ளி ஆண்டு விழாக்களில் கலை நிகழ்ச்சிகளுக்கு புத்தாடை வாங்கச் சொல்லி குழந்தைகளை வற்புறுத்துவது கிடையாது இருக்கும் ஆடைகளை அணிந்தே பங்கேற்க சொல்வேன்.
குழந்தைகளுக்கு புத்தாடை பரிசு :
அந்த வடுவிற்கு மருந்திடத்தான் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வறுமையில் ஏங்கும் குழந்தைகளுக்கு அழகான ஆடைகளை பரிசளித்து மகிழ்ந்து கொள்கிறேன். நான் செய்யும் இது போன்ற உதவிகளை சிலர் விளம்பரம் என்று கொச்சைப்படுத்தி இருக்கிறார்கள் அவர்களுக்குத் தெரிந்ததை தானே கூற முடியும். தீபாவளி போன்ற பண்டிகைகளில் ஈடுபாடு இல்லை என்றாலும் அதைக் காரணமாகக் கொண்டு குழந்தைகளுக்கு புத்தாடை பரிசளிப்பதுண்டு. அந்த நிமிடம் அவர்களின் முகங்களில் காண்கின்ற சிரிப்பானது அன்று வலியை தந்த அந்த பாடலுக்கு சிரிப்பை தந்திருக்கிறது.
சாதி அடிப்படையிலும், பொருளாதார அடிப்படையிலும் புறக்கணிக்கப் படுவதன் வலி அவர்களுக்குத்தான் தெரியும். ஆரம்பத்தில் சமூகத்தின் மீது பெருங்கோபம் இருந்தது. ஆனால் கோபம் எதையும் சாதித்து விடாது. இங்கு மாற்றம்தான் வேண்டும். அந்த மாற்றம் கல்வியால் மட்டுமே சாத்தியம். எனவே தான் நானிருக்கும் இடத்தில் என்னால் முடிந்த அளவு ஜீவனுள்ள சந்திப்பின் மூலம் மாற்றத்தை தேடுகிறேன்..
குறிப்பு : படித்தல் மிகவும் பிடித்த/ சமூக அக்கறை கொண்ட செய்தி - சமூக அக்கறையோடு பதிவிட்டுள்ள இந்த செய்தி அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற முகநூல் ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.