படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - 'அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்' - இதுபோன்ற பிற்போக்குத் தனங்களை நம்பிக்கொண்டிருக்கும் ஆசிரியரா நீங்கள் ?
வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு - 'அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்'
'கோலெடுத்தா குரங்கு ஆடும்'
இதுபோன்ற பிற்போக்குத் தனங்களை நம்பிக்கொண்டிருக்கும் ஆசிரியர்களுள் ஒருத்தியாக தான் பணி சேர்ந்த தொடக்க வருடங்களில் நானும் இருந்தேன்.
குழந்தைகளை நல்வழிப்படுத்துதல் தான் தண்டனையின் நோக்கம் என எனது ஆசிரியர்களால் பயிற்றுவிக்கப்பட்டு இருந்தேன். பிறகு குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளும் ஆசிரியையாக, தண்டனை என்பது மன ரீதியாக அவர்களைப் பாதிப்படைய செய்கிறது என்பதை உணர்ந்தேன். அது நல்வழிப் படுத்துவதற்கு மாறாக, செய்யும் செயல்களில் பிடிவாதத்தையும், முரட்டுத்தனத்தையும் உண்டாக்கும் என்ற உண்மையை உணர்த்தியவர்கள் எனது பள்ளி குழந்தைகளே.
சென்ற மாதத்தில் எங்கள் பள்ளியில் நடைபெற்ற இல்லம் தேடிக் கல்வி குறித்தான SMC கூட்டத்திற்கு என்னிடம் பயின்ற மாணவி வந்திருந்தாள். அவள்தான் எங்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு கற்பிக்கும் தன்னார்வலராக நியமிக்கப்பட்டு இருக்கிறாள் என்பதை அறிந்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
"உங்களை எப்போதும் மறக்க மாட்டேன் டீச்சர்.. உங்களால் தான் இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்" என்று கூறினாள். மனம் மிகவும் மகிழ்ந்தது. அடுத்ததாக அவர் கூறிய வார்த்தை, எனது அன்றைய தூக்கத்தைப் பறித்துக் கொண்டது.
"அன்றொருநாள் நான் செய்த தவறுக்காக நீங்கள் என் கையில் அடித்தது நினைவில் இருக்கு டீச்சர்.. இனி உங்களிடம் அடி வாங்கக் கூடாது என்று போட்டிப் போட்டு படித்ததால்தான் இந்த நிலையில் இருக்கிறேன்" என்றார். (ஆசிரியர் பயிற்சி முடித்து போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறாள்)
குழந்தைகளுக்காக எத்தனையோ மகிழ்வான தருணங்களை உருவாக்கி இருக்கிறேன். ஆனால் முதன்முதலாக ஒரு மாணவி நான் அடித்த தருணத்தை மனதில் வைத்து என்னை நினைவில் நிறுத்துகிறாள் என்பது மிகுந்த மனவேதனையை அளித்தது. அவளிடம் சொன்னேன்,
"பாப்பா அந்த செயலுக்காக இப்பொழுது உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். அது சரியான செயலன்று.. அதை நான் கைவிட்டு பல வருடங்கள் ஆகிறது. வருங்கால பிள்ளைகளை நீ வழி நடத்த இருப்பதால் உன்னிடம் ஒன்று கேட்டுக் கொள்கிறேன்" என்றேன்.
" சொல்லுங்க டீச்சர் " என்றாள்.
குழந்தைகளைத் தண்டிக்கும் செயலை ஒரு பொழுதும் கையில் எடுக்காதே" என்று கேட்டுக்கொண்டேன்.
ஆமாம் தோழமைகளே, நமது குழந்தை தானே தண்டிப்பதற்கு நமக்கு இல்லாத உரிமையா என்று எண்ணிவிடாதீர்கள். தண்டித்தல் என்பது பிறர் மீது நான் செலுத்தும் ஒடுக்குமுறையும், மனித உரிமை மீறலுமான செயலாகும். தண்டனைகள் குழந்தைகளின் இயல்பான சிந்தனையை, அணுகு முறையை சிதைத்து பயம் கொள்ளச் செய்கிறது. இந்த பயமானது பிற்காலத்தில் அடக்குமுறைகளுக்கு எதிர்வினையாற்றத் தெரியாத, கட்டளைகளுக்கு அடிபணிகிற அடிமை சமூகத்தை உருவாக்க வழிவகுக்கும்.
தண்டனைகளுக்கு மாற்றாக அன்பான வழிநடத்துதல் மூலமாக குழந்தைகளை திருத்தம் அடையச் செய்யலாம் . சுயமரியாதை, சமதர்மம், உயிர்நேயம் போன்றவற்றை நாம் பின்பற்றினால் தான் நமது வருங்காலமும் பின்பற்றும் ..
குறிப்பு :
படித்தல் மிகவும் பிடித்த/ சமூக அக்கறை கொண்ட செய்தி - சமூக அக்கறையோடு பதிவிட்டுள்ள இந்த செய்தி அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற முகநூல் ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.