படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - பாலியல் கல்வியின் அவசியம் ! (வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு)

படித்ததில் மிகவும் பிடித்த செய்தி - பாலியல் கல்வியின் அவசியம் !


" பொண்ணா அது,எந்த நேரமும் போனும் கையுமா நிக்குது.. கடைத்தெருவுல கண்டவனோட பேசிட்டு திரியுது.. அதுக்கெல்லாம் உதவி செய்யறது வேஸ்ட்.. நீங்க வேணா பாருங்க, அதெல்லாம் உருப்படாமத்தான் போகும்"
பள்ளி செல்லும் பதின்ம வயது மாணவி குறித்து ஆசிரியர் ஒருவர் என்னிடம் தெரிவித்த கருத்து இது...

முதலில் அவர் குறிப்பிடும் அந்தப் பெண்ணின் நிலையை சொல்கிறேன்.

i) 3 வேளை உணவுக்கு வழியில்லை..
ii) சுற்றியிருக்கும் சமூகத்தின் அரவணைப்பு இல்லை..
iii) காதலுக்கும், இனக்கவர்ச்சிக்கும் சரியான வேறுபாடு அறிந்துக் கொள்ளும் வயதிலில்லை..
iv) நல்ல வழியில் நடத்தி செல்லும் நட்பு வட்டம் இல்லை..
V) இணையத்தள வசதிகளை பயன்படுத்துவதில் எந்த கட்டுப்பாடும் இல்லை..
இத்தனை இல்லைகளுக்கு மத்தியில் தான் தடுமாற்றம் இல்லாத மாணவியாக அவள் பயணிக்கவேண்டும்..

சாத்தியம் தானா தோழர்களே?

சாத்தியப்படுத்த ஒன்றே ஒன்று இருக்கிறது. சமூகத்தை கட்டமைக்கும் மாபெரும் பொறுப்பைத் தாங்கிய பள்ளி இருக்கிறது. அதன் அங்கமாக மாணவர்களை வழிநடத்த ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் அப்படியான ஆசிரியரே மாணவர்களின் நிலை உணர்ந்து வழிக்காட்டாமல் அவர்களை வசைப்பாடி சாபமிடுவது என்ன மாதிரியான மனநிலை?

15 வயதில் ஒருவர் காதலிப்பது சரியா பிழையா என்பது அவரது கருத்தாக இருக்கட்டும். ஆனால் 15 வயதில் காதல் உணர்வு சாதாரணமானதுதான். நாம் அனைவரும் அந்த வயதை கடந்து வந்திருப்பதால் திரும்பிப் பாரத்தால் தெரியும். பதின்ம வயது பிரச்சனை களை எப்படி கையாள வேண்டும் என்பது பிள்ளைகளுக்கு தெரியாது தான். அது சில ஆசிரியர்களுக்கும் தெரியாமல் இருப்பதுதான் ஆத்திரப்படவும், அச்சப்படவும் வைக்கிறது.

அடுத்தது நமது சமூக அமைப்பிற்குள் வருகிறேன். காதலிக்கும் பிள்ளைகளை ஊரே சேர்ந்து கொலைக்காரர்கள் போல பார்ப்பது சரியான கண்ணோட்டமா? வயதிற்கு வந்துவிட்டாள் என்றதும் மேளம் தட்டி, அவளது இனப்பெருக்கத்திற்கான கருப்பை தயாராகிவிட்டது என ஊருக்கே அறிவிக்கும் சமூகமல்லவா நமது சமூகம்.

கருப்பை தயாராகிவிட்ட நிலையில் ஹார்மோன் தூண்டப்பட்டு அதற்கான செயல்பாடுகளை நோக்கி அவள் ஈர்க்கப்படுவது இயற்கைதானே..இதை நாம் முறைப்படுத்த தான் முயல வேண்டும். இனக் கவர்ச்சியால் உந்தப் பட்டு அவசரப்படுவதால் ஏற்படக்கூடிய தவறான விளைவுகளை பெரியவர்கள் பிள்ளைகளிடம் மனம் திறந்து உரையாடுதலே அவசியமாகிறது.

"அதெல்லாம் போய் எப்படிங்க பிள்ளைங்க கிட்ட பேசுறது? இத வேற பேசி வம்புல மாட்டிக்கிடணுமா? எது எக்கேடு போனா நமக்கு என்னங்க? வந்தமா, பாடத்திட்டத்தில் என்ன கொடுத்திருக்காங்களே அதை வரி மாறாமல் நடத்திட்டு போனோமான்னு இருப்பது தான் நம்ம வேலைக்கு Safe" என்றுதான் ஒதுங்கிக்கொள்ள நினைக்கிறார்கள். ஒதுங்க வைக்கவும் படுகிறார்கள்.

அப்படி நாம் ஒதுங்கிக் கொள்ளும் போது சமூகம், நட்பு, திரைப்படம் , வலைதளங்கள், கலாச்சாரம், பண்பாடு போன்ற போலியான பிம்பங்கள் மூலமாகத்தான் மாணவர்களுக்கு பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்படும். அப்பொழுது பாலியல் சார்ந்த ஆர்வக்கோளாறில் தடுமாறத்தான் செய்வார்கள். அப்பொழுது அவர்களால் அவர்களுக்கும், சமூகத்திற்கும் தீங்கு நடக்கும்போது சமூகம் கெட்டுவிட்டது என்று மற்றவர்கள் குரலெழுப்புவதிலும் கூச்சலிடுவது பயனில்லை.

இன்று நெறிபிறழ் நடத்தைக் கொண்டு தவறி விழும் அத்தனை பிள்ளைகளும் இந்த மாதிரியான சூழலில்தான் பாலியல் தேவை பூர்த்தியாகும் வாய்ப்புக்காக காத்திருந்து எதிர்பாலினரிடமோ, சமபாலினரிடமோ தனிமையிடமோ ஈர்க்கப்பட்டு தான் வாழ்க்கையை தொலைத்து நிற்கிறார்கள்.

அந்த நேரத்தில் அவர்களை வழிநடத்தும் வழியறியாமல் சமூக பொறுப்பற்ற நிலையில் சில ஆசிரியர்களும், எழுத்தாளர் ஜெயமோகன் ேபான்றவர்களும் மாணவர்களை உருபடாதவர்கள் என்றும், பொறுக்கிகள் என்றும் வசைபாட மட்டும் வரிந்துக் கட்டிக் கொண்டு வருவதில் என்ன நியாயம் இருக்கிறது?

குறிப்பு :
படித்தல் மிகவும் பிடித்த/ சமூக அக்கறை கொண்ட செய்தி - சமூக அக்கறையோடு பதிவிட்டுள்ள இந்த செய்தி அனைவரையும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தோடு வகுப்பறை ஒரு ஜீவனுள்ள சந்திப்பு என்ற முகநூல் ஆசிரிய சகோதரியின் முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டது.