Ads

நிதித் துறை நிபந்தனையால் ஆசிரியர் சம்பளத்துக்கு சிக்கல்

நிதித் துறை நிபந்தனையால் ஆசிரியர் சம்பளத்துக்கு சிக்கல்


இடமாறுதல் பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களில் ஒரு தரப்பினருக்கு, மார்ச் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. நிதித் துறை, பள்ளிக் கல்வி துறை இடையே அரசாணை தொடர்பான பிரச்னையால், இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

தொடக்க பள்ளிகள் தவிர, மற்ற அரசு பள்ளிகளில், ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் நடந்து முடிந்துள்ளது. இதில் இடம் மாற்றம் பெற்ற ஆசிரியர்களில் ஒரு தரப்பினருக்கு, கடந்த மார்ச் மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.அதாவது, அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்கள் சேர்ந்துள்ள இடங்களில், கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அந்த இடங்களுக்கு, ஆசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. இப்படி வந்த ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க, பள்ளிகளில் கூடுதல் இடம் ஏற்படுத்தியதற்கான அரசாணையை சமர்ப்பிக்குமாறு, நிதித் துறையில் இருந்து நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், கூடுதலாகநியமிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்கள், புதிதாக ஏற்படுத்தப்பட்டவை இல்லை என்பதால், அதற்கு பள்ளிக் கல்வி துறையால் புதிய அரசாணை பிறப்பிக்க முடியாத நிலை உள்ளது.

ஏற்கனவே மாணவர் எண்ணிக்கை குறைவாக இருந்த பள்ளிகளில், கூடுதலாக இருந்த ஆசிரியர் பணியிடங்கள் அவை. அங்கு தேவையில்லை என்பதால், தேவையுள்ள பள்ளிகளுக்கு, அந்த பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.பல ஆண்டுகளுக்கு முன், அரசால் ஒப்புதல் அளிக்கப்பட்ட இடங்கள் என்பதால், அதற்கான அரசாணையை, பள்ளிக் கல்வி துறை தேடி வருகிறது. இந்த அரசாணை கிடைத்த பின்பே, நிதித் துறையில் இருந்து சம்பள அனுமதி பெற முடியும் என்பதால், பிரச்னை நீடித்து வருகிறது.