Ads

தொகாநிலைத் தொடர்கள்-10th Std -Tamil - Book Back Questions and Answers

தொகாநிலைத் தொடர்கள்-10th Std -Tamil - Book Back Questions and Answers

கற்பவை கற்றபின

Question 1.

இன்று நீங்கள் படித்த செய்தித்தாள்களில் உள்ள தொகாநிலைத் தொடர்களைத் தொகுத்து வருக.

பத்தி செய்தி :

கதிரவன் வந்தான். கதிரவா வா என அழைத்தாள் சீதா. சீதையைக் கண்டேன் எனக் கூறிய கதிரவன், அம்மா நலமா? எனக் கேட்டான். அம்மா நனி நலம்; நேற்றுதான் வந்து போனாள்; உன்னை விசாரித்தாள் எனச் சீதா கூறினாள். இவ்வாறு பேசிக் கொண்டிருந்த சீதாவின் கழுத்தில் கத்தியை வைத்தான் கதிரவன். உன் சங்கிலியைத் தா என்றான். அவள், அவன் கையைத் தட்டிவிட்டு வெளியே ஓடிப்போனாள். திருடன், திருடன் என அவள் கூச்சலிட்டதைக் கேட்ட ஊர் மக்கள் அனைவரும் திரண்டனர்; கதிரவனைப் பிடித்தனர். பின் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர் காவலர் அவனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். நம்பிக்கை துரோகி ஒருவனிடமிருந்து தான் காப்பாற்றப்பட்டதற்காக இறைவனுக்கு நன்றி கூறினாள்.

Answer:

கதிரவன் வந்தான், அம்மா நலமா?, சீதா கூறினாள்,அனைவரும் திரண்டனரா? – எழுவாய்த் தொடர்கள்

கதிரவா வா  – விளித்தொடர்

திருடன் திருடன் – அடுக்குத்தொடர் (அச்சம் காரணமாக)

அழைத்தாள் சீதா – வினைமுற்றுத் தொடர்

நனிநலம் – உரிச்சொல் தொடர்

கூறிய கதிரவன், கேட்ட ஊர் மக்கள் – பெயரெச்சத் தொடர்கள்

வந்து போனாள் – வினையெச்சத் தொடர்

சீதையைக் கண்டேன், உன்னை விசாரித்தாள், கத்தியை வைத்தான், கதிரவனைப் பிடித்தனர், சங்கிலியைத் தா – இரண்டாம் வேற்றுமைத்  தொகாநிலைத் தொடர்கள்

கழுத்தில் கத்தி, சிறையில் அடைத்தனர் – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத்

தொடர்கள்

காவல் நிலையத்திற்குத் தகவல், இறைவனுக்கு நன்றி  – நான்காம் வேற்றுமைத்   தொகாநிலைத் தொடர்கள்

Question 2.

கீழ்க்காணும் பத்தியில் உள்ள தொடர் வகைகளை எடுத்து எழுதுக.

மாடியிலிருந்து இறங்கினார் முகமது. அவர் பாடகர். பாடல்களைப் பாடுவதும் கேட்பதும் அவருக்குப் பொழுதுபோக்கு. அவரது அறையில் கேட்ட பாடல்களையும் கேட்காத பாடல்களையும் கொண்ட குறுந்தகடுகளை அடுக்கு அடுக்காக வைத்திருப்பார்.

Answer:

இறங்கினார் முகமது – வினைமுற்றுத் தொடர்

அவர் பாடகர் – எழுவாய்த் தொடர்

பாடுவது கேட்பது – கூட்டு வினையெச்சத் தொடர்

கேட்ட பாடல்கள் – பெயரெச்சத் தொடர்

கேட்காத பாடல்கள் – எதிர்மறைப் பெயரெச்சத் தொடர்

அடுக்கு அடுக்காக – அடுக்குத் தொடர்

Question 3.

வண்ணச் சொற்களின் தொடர் வகைகளை எழுதுக.

Answer:

பழகப் பழகப் பாலும் புளிக்கும் – அடுக்குத்தொடர்

வடித்த கஞ்சியில் சேலையை அலசினேன் – பெயரெச்சத் தொடர்

மேடையில் நன்றாகப் பேசினான். – வினையெச்சத் தொடர்

வந்தார் அண்ணன் – வினைமுற்றுத் தொடர்

அரிய கவிதைகளின் தொகுப்பு இது. – ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

மொழியை ஆள்வோம்

மொழிபெயர்க்க.

Respected ladies and gentleman, I am llangovan studying tenth standard. I have come here to say a few words about our Tamil Culture. Sangam literature shows that Tamils were best in culture and civilization about two thousand years ago. Tamils who have defined grammar for language have also defined grammar for life. Tamil culture is rooted in the life styles of Tamils throughout India, Srilanka, Malaysia, Singapore, England and Worldwide. Though our culture is very old, it has been updated consistently. We should proud about our culture. Thank you one and all.

Answer:

தமிழ்ப் பண்பாடு

மரியாதைக்குரியவர்களே! என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பில் படிக்கிறேன். நான் தமிழ் பண்பாட்டைப் பற்றி சில வார்த்தைகள் சொல்ல வந்திருக்கிறேன். இரண்டாயிரம் வருடத்திற்கு முன் பண்பாட்டிலும், நாகரிகத்திலும் சிறந்து விளங்கியவர்கள் தமிழர்கள் என்று சங்க இலக்கியம் கூறுகிறது. மொழிக்கு இலக்கணம் வகுத்த தமிழரே வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்தனர். தமிழர்களின் பண்பாடு இந்தியா, ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் உலகமெங்கும் உள்ள தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தில் வேரூன்றி உள்ளது. நம் பண்பாடு பழமையானதாக இருந்தாலும் அது சீரான முறையில் மேம்படுத்தி உள்ளது. நாம் நம் பண்பாட்டைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும். அனைவருக்கும் நன்றி!

பழமொழிகளை நிறைவு செய்க.

உப்பில்லாப் …………………………..

ஒரு பானைச் …………………………..

உப்பிட்டவரை …………………………..

விருந்தும் …………………………..

அளவுக்கு …………………………..

Answer:

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.

ஒரு பானைச் சோற்றுக்கு, ஒரு சோறு பதம்.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

பத்தியைப் படித்துக் கருத்தைச் சுருக்கி எழுது.

பழையசோறு

பச்சை நெல் வயலைக் கண்கள் முழுதும் சுமந்து இளநெல்லை நுகர்ந்து, அதன் பாலை ருசித்து, நீராவியில் அந்த நெல் அவியும் கதகதப்பான புழுங்கல் மணம் வரை சுவைத்தவள் நான். அவித்து, காய்ந்து குத்திய அந்தப் புழுங்கல் அரிசியை, அதன் கடுப்பு மணத்தை சோறாகு முன் கை நிறைய அள்ளி வாயில் போட்டு நெரித்து மென்றவள் சொல்கிறேன். பகலெல்லாம் உச்சி வெயிலுக்கு அது சுடச்சுடப் புழுங்கலரிசிச் சோறு இரவு முழுவதும் அந்தச் சோறு நீரில் ஊறும். விடிந்த இந்தக் காலையில் அதன் பெயர் பழைய சோறு அல்லது பழையது காத்திருந்து, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் கடித்து நீராகாரம் போல் குடிப்பது ஒரு வகை. வாழை இலையில் அந்தப் பழையச் சோற்றைப் பிழிந்து போட்டால், வடுமாங்காய் அல்லது உப்பு நார்த்தங்காய் அதனுடன் சேர்த்துக் கொள்ளத் துடிப்பது இன்னொரு வகை. சுண்ட வைத்த முதல் நாள் குழம்பு இன்னும் உச்சம்! நல்ல பழையது மாம்பழம் வாசம் வீசுமாம். பழைய சோறு அது கிராமத்து உன்னதம்.

“கைக்கடல் முத்துக்கு ஈடாய் மிக்க நெல்முத்து” – முக்கூடற்பள்ளு

Answer:

நெல்லை அவித்து காயவைத்து எடுக்கும் புழுங்கல் அரிசியைச் சோறாக்கி, அதனை இரவெல்லாம் நீரில் ஊறவைத்து, கிடைக்கும் பழைய சோற்றுடன் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், வடுமாங்காய், உப்பு நாரத்தங்காய் மற்றும் சுண்ட வைத்த குழம்பு இவற்றில் ஒன்றைக் கூட்டாக வைத்து சாப்பிடுவது கிராமத்து உன்னதம்.

கதையாக்குக.

மனித வாழ்வில் ஒவ்வொரு நாளும் புதுப்புது மனிதர்களைப் பார்க்கிறோம்; புதுப்புதுச் செய்திகள் கிட்டும்! கிட்டுகிற கருப்பொருளைத் திரட்டி, கற்பனை நயம் கதையாக்குவது ஒரு கலை. அது சிறுகதையாக இருக்கலாம். புதினமாக இருக்கலாம். அன்பை எதிர்பார்த்திருப்பவராக, யாருமற்றவராக……. இருக்கும் ஒருவர் உங்களின் உதவியால் மனம் மகிழ்ந்த நிகழ்வினைக் கதையாக்குக.

Answer:

உதவி

அந்திமாலைப் பொழுதில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த போது பாலத்தின் கீழிருந்து சத்தம் கேட்டு பாலத்தின் அடியில் எட்டிப் பார்த்தேன். பசிமயக்கத்தால் சுருண்டு கிடந்தாள் ஒரு பெண். குளிர் தாங்க முடியாமல் சத்தம். அரைகுறை ஆடையில் இருந்தாள். மனநலம் பாதிக்கப்பட்ட பெண் எனக் கண்டுபிடித்தேன். உடனே, வீட்டிற்கு வந்து உணவை ஒரு பாத்திரத்திலும், ஆடை மற்றும் ஒரு போர்வையை ஒரு பையிலும் எடுத்துக் கொண்டு போய்க் கொடுத்தேன்.

அவ்வுணவை எடுத்து சாப்பிடுவதற்குக் கூட அவளிடம் பலமில்லை. பாதி சாப்பிட்டு விட்டு உட்கார முடியாமல் அவ்வுணவின் மீதே சரிந்து விழுந்தாள். உடனே அருகில் இருந்த மருத்துவரை அழைத்து வந்து மருத்துவம் பார்த்து, அவளை மருத்துவரின் உதவியுடன் மனநலக் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தேன். அவள் மனதில் ஏதோ ஒரு மகிழ்ச்சி தென்பட்டது.

கடிதம் எழுதுக.

உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

Answer:

உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம்

அனுப்புநர்

கண்ணன்,

25, வள்ளல் தெரு,

அண்ணாநகர்,

திருநெல்வேலி – 11.

பெறுநர்

உணவு பாதுகாப்பு ஆணையர் அவர்கள்,

உணவு பாதுகாப்பு ஆணையம், திருநெல்வேலி.

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் : தரமற்ற உணவு வழங்கிய உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு வேண்டுதல் – தொடர்பாக.

வணக்கம்.

இன்று காலை பேருந்துநிலையத்திற்கு வெளியில் உள்ள “சுவையகம்” என்ற உணவகத்திற்குச் சென்றோம். நானும் என் நண்பனும் உணவு உண்டோம். உணவில் கல்லும், குழம்பில் பூச்சியும் கிடந்தது. உணவக மேலாளரிடம் முறையிட்டோம். அதற்குச் சரியான காரணத்தை அவர் அளிக்கவில்லை. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த உணவு விலைப்பட்டியல் பலகையில் எழுதி வைக்கப்பட்டிருந்த தொகையை வாங்காமல் கூடுதலாக இருபது ரூபாயைக் காசாளர் வாங்கினார்.

எனவே, தரமற்ற உணவையும், விலை கூடுதலாகவும் விற்பனை செய்த, அந்த உணவகத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதற்கான தக்க சான்றுகள் (புகைப்படம்) இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

நன்றி!

திருநெல்வேலி.

23.03.2020.

இப்படிக்கு,

தங்கள் உண்மையுள்ள,

கண்ணன்.

உறைமேல் முகவரி:

நயம் பாராட்டுக.

“கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில்

அத்தமிக்கும் போது அரிசிவரும் – குத்தி

உலையிலிட ஊரடங்கும் ஓர் அகப்பை அன்னம்

இலையிலிட வெள்ளி எழும்”. – காளமேகப் புலவர

திரண்ட கருத்து :

வாழைக்கு அழகு குருத்து

செய்யுளுக்கு அழகு திரண்ட கருத்து

கடல் சூழ்ந்த ஊர் நாகப்பட்டினம். அங்குள்ள காத்தான் சத்திரத்தில் பொழுது இறங்கும் போதுதான் அரிசி வரும். அதனைத் தீட்டி உலையில் போடும்போது ஊரே அடங்கிப் போயிருக்கும். ஓர் அகப்பைச் சோறு இலையில் போடும்போது விடிவெள்ளி முளைத்துவிடும்.

தொடை நயம் :

தொடையற்ற பாட்டு

நடையற்றுப் போகும்

செய்யுளில் எதுகை, மோனை, இயைபு, முரண் ஆகிய உறுப்புகளால் தொடுக்கப்படுவது தொடை.

மோனை நயம் :

மோனையற்ற பாட்டு

சேனையற்ற நாடு

செய்யுளில் அடிதோறும் அல்லது சீர்தோறும் முதல் எழுத்து ஒன்றி வருவது மோனை எனப்படும்.

சான்று:

கத்துகடல், காத்தான்

உலையிலிட, ஊரடங்கும்

அத்தமிக்கும், அரிசி வரும்

எதுகை நயம் :

வீரத்துக்கு அழகு வேங்கை

பாட்டுக்கு அழகு எதுகை

அடிதோறும் அல்லது சீர்தோறும் இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை எனப்படும்.

சீர் எதுகை:

கத்துகடல், காத்தான், சத்திரத்தில்; அத்தமிக்கும், குத்தி

அடி எதுகை:

அணி நயம் :

கோவிலுக்கு மணி அழகு

செய்யுளுக்கு அணி அழகு

இப்பாடல் இரு பொருள்பட வந்து இரட்டுற மொழிதல் அணியால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

பா நயம் :

இப்பாடல் நேரிசை வெண்பா வகையைச் சார்ந்தது.

தலைப்பு :

‘நாகை சத்திரம்’ என்பது இப்பாடலுக்குப் பொருத்தமான தலைப்பு.

மொழியோடு விளையாடு

விடுபட்ட எழுத்துகளை நிரப்பி அந்த எழுத்துகளை மட்டும் இணைத்து ஒளிந்துள்ள ஒரு நூலின் பெயரைக் கண்டுபிடி.

இ – கு (பறவையிடம் இருப்பது)

கு – தி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)

வா –  (மன்னரிடம் இருப்பது)

அ – கா (தங்கைக்கு மூத்தவள்)

ம –  (அறிவின் மறு பெயர்)

பட – (நீரில் செல்வது படகு)

Answer:

இறகு (பறவையிடம் இருப்பது)

குருதி (சிவப்பு நிறத்தில் இருக்கும்)

வாள் (மன்னரிடம் இருப்பது)

அக்கா (தங்கைக்கு மூத்தவள்)

மதி (அறிவின் மறு பெயர்)

படகு (நீரில் செல்வது படகு)

Answer

திருக்குறள்

இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

சிலை – சீலை, தொடு – தோடு, மடு – மாடு, மலை – மாலை, வளி – வாளி, விடு – வீடு

Answer:

சிலை – சீலை : எ.கா: சிலையைத் திரைச்சீலையால் மறைத்திருந்தனர்.

தொடு – தோடு : காதைத் தொடும்போது தோடு அழகாக ஆடியது.

மடு – மாடு : மடுவில் (குட்டையில்) மாடு நீர்க் குடித்தது.

மலை – மாலை : மலை மீது ஏறி மாலையில் விளையாடினேன்.

வளி – வாளி : வளியும் (காற்றும்) வாளியும் (அன்பும்) இல்லாமல் வாழ முடியாது.

விடு – வீடு : அகந்தையை விடு, வீடுபேறு (சொர்க்கம்) கிடைக்கும்.

அகராதியில் கண்டு பொருள் எழுதுக.

அ) ஊண், ஊன்

ஆ) திணை, தினை

இ) அண்ணம், அன்னம்

Answer:

அ) ஊண், ஊன்

ஊண் – இரை, உண்டி, சோறு, உணவு, ஆன்மாவின் சுகதுக்கனுபவம்.

ஊன் – உடல், தசை, நிணம், மாமிசம், சரீரம்.

ஆ) திணை, தினை

திணை – இடம், ஒழுக்கம், குடி, குலம், பூமி, பொருள்.

தினை – ஒரு சாமை (தானியம்), சிறுமை.

இ) அண்ணம், அன்னம்

அண்ணம் – மேல்வாய், மேல் நாக்கு.

அன்னம் – கவரிமான், சோறு தானியம், பிரம்ம வாகனம்.

ஈ) வெல்லம், வெள்ளம்

வெல்லம் – கருப்பஞ்சாற்றுக்கட்டி.

வெள்ளம் – நீர்ப்பெருக்கு, கடல், கடலலை, நீர், ஈரம், மிகுதி, உண்மை .

காட்சியைக் கண்டு கவினுற எழுதுக.

Answer:

செயல் திட்டம்

உணவு, விருந்து சார்ந்த பழமொழிகளையும் விழிப்புணர்வுத் தொடர்களையும் திரட்டி, அகர வரிசைப்படுத்தி வகுப்பறையில் காட்சிப்படுத்துக.

எ.கா: நொறுங்கத் தின்றால் நூறு வயது

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.

உப்பிட்டவரை உள்ளளவும் நினை.

உப்பில்லாப் பண்டம் குப்பையிலே.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

கடைத் தேங்காயை வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே.

நொறுங்கத் தின்றால் நூறு வயது.

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்.

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

முழு பூசணியைச் சோற்றில் மறைக்காதே.

வாழ்வதற்காக உண்; உண்பதற்காக வாழாதே.

விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

விளையும் பயிர் முளையிலே தெரியும்.

வினை விதைத்தவன் வினை அறுப்பான்; தினை விதைத்தவன் தினை அறுப்பான்.

வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்.

கலைச்சொல் அறிவோம்

செவ்விலக்கியம் – Classical literature

காப்பிய இலக்கியம் – Epic literature

பக்தி இலக்கியம் – Devotional literature

பண்டைய இலக்கியம் – Ancient literature

வட்டார இலக்கியம் – Regional literature

நாட்டுப்புற இலக்கியம் – Folk literature

நவீன இலக்கியம் – Modern literature

நிற்க அதற்குத் தக

“தம்பி… உனக்குப் பிடிச்ச காய் சொல்லு” – “கேரட்”

“பிடிச்ச பழம்” – “ஆப்பிள்”

“பிடிச்ச காலை உணவு” – “நூடுல்ஸ் ”

“மத்தியானத்துக்கு” – “ஃப்ரைடு ரைஸ்”

“ராத்திரி” – “பீட்ஸா அல்லது பாஸ்தா”

இது ஏதோ ஆங்கிலப்படத்தின் வசனம் அல்ல. “சரியா சாப்பிட மாட்டேங்கிறான் டாக்டர்” என்று என்னிடம் அழைத்து வரப்பட்ட ஒரு சிறுவனுடனான என் உரையாடல் ஒட்டு மொத்த இளைய தலைமுறையும் பாரம்பரிய உணவை விட்டு வேகமாக விலகிச் சென்றது எப்படி? இட்லியும் சாம்பார் சாதமும் கத்திரிக்காய்ப் பொரியலும் இனி காணாமல் போய்விடுமா? அதிர்ச்சியான பதில் ஆம் காணாமல் போய்விடும்! உங்கள் குழந்தைகள் “ஆடு மாடுகளைத் தவிர மனுஷங்க கூட கீரையைச் சாப்பிடுவாங்களா மம்மி? என எதிர்காலத்தில் கேட்கக்கூடும்.

மருத்துவர் கு. சிவராமனின் இக்கருத்திற்குச் சமூக அக்கறையுடனான உங்களின் பதில் என்னவாக இருக்கும்?

Answer:

நாகரிகம் கருதியோ, நாச்சுவை கருதியோ நம் பாரம்பரிய உணவுகளைத் தவிர்த்தல் கூடாது. வெப்பமயமான நம் நாட்டிற்கு புழுங்கல் அரிசியே ஏற்றது. ஆகவே, நம் நாட்டுச் சூழலுக்கு ஏற்ற பாரம்பரிய உணவுகளைத் தினமும் கட்டாய உணவாக உட்கொள்ளும் போது அது நம் உடலுக்கு மிகுந்த சக்தியைக் கொடுக்கும். பாரம்பரிய உணவுகளைத் தவிர்க்கும் போது ‘உணவே மருந்து என்ற நிலை மாறி ‘மருந்தே உணவு’ என்ற நிலைக்குத் தள்ளப்படுவோம் என்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

பாடநூல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது…………………………….

அ) வேற்றுமை உருபு

ஆ) எழுவாய்

இ) உவம உருபு

ஈ) உரிச்சொல்

Answer:

அ) வேற்றுமை உருபு

குறுவினா

Question 1.

‘எழுது என்றாள்’ என்பது விரைவு காரணமாக ‘எழுது எழுது என்றாள்’ என அடுக்குத் தொடரானது. ‘சிரித்துப் பேசினார்’ என்பது எவ்வாறு அடுக்குத்தொடராகும்?

Answer:

‘சிரித்து பேசினார்’ என்பது, உவகை காரணமாக சிரித்து சிரித்து பேசினார்’ என அடுக்குத்தொடராகும்.

Question 2.

பாரதியார் கவிஞர், நூலகம் சென்றார், அவர் யார்? ஆகிய தொடர்களில் எழுவாயுடன் தொடரும் பயனிலைகள் யாவை?.

Answer:

பெயர்ப் பயனிலை –

வினை பயனிலை – சென்றார்

வினா பயனிலை – யார்?

சிறுவினா

Question 1.

‘கண்ணே கண்ணுறங்கு!

காலையில் நீயெழும்பு

மாமழை பெய்கையிலே

மாம்பூவே கண்ணுறங்கு!

பாடினேன் தாலாட்டு

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு!

இத்தாலாட்டுப் பாடலில் அமைந்துள்ள தொடர் வகைகளை எழுதுக.

Answer:

‘கண்ணே கண்ணுறங்கு – விளித்தொடர்

காலையில் நீயெழும்பு – ஐந்தாம் வேற்றுமை தொகாநிலைத் தொடர்

மாமழை பெய்கையிலே – உரிச்சொல் தொடர்

மாம்பூவே கண்ணுறங்கு – விளித்தொடர்

பாடினேன் தாலாட்டு – வினைமுற்றுத் தொடர்

ஆடி ஆடி ஓய்ந்துறங்கு – அடுக்குத்தொடர்

கூடுதல் வினாக்கள்

பலவுள் தெரிக

Question 1.

கீழ்க்காண்பனவற்றுள் பொருந்தாத இணையைத் தேர்வு செய்க.

அ) காவிரி பாய்ந்தது – எழுவாய்த் தொடர்

ஆ) பாடினாள் கண்ணகி – வினைமுற்றுத் தொடர்

இ) நண்பா எழுது – விளித்தொடர்

ஈ) பாடி மகிழ்ந்த னர் – பெயரெச்சத்தொடர்

Answer:

ஈ) பாடி மகிழ்ந்தனர் – பெயரெச்சத்தொடர்

Question 2.

சரியான வரிசையைத் தேர்ந்தெடுத்து எழுது.

i) பாடத்தைப் படித்தாள் – 1. இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

ii) இசையால் ஈர்த்தார் – 2. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

iii) கயல்விழிக்குப் பரிசு – 3. ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

iv) முருகனின் சட்டை – 4. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

அ) 1, 2, 3, 4

ஆ) 2, 1, 4, 3

இ) 1, 2, 4, 3

ஈ) 4, 3, 2, 1

Answer:

இ) 1, 2, 4, 3

Question 3.

ஒரு தொடர் மொழியில் இருசொற்கள் இருந்து அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே, பொருளை உணர்த்துவது……………………………

அ) தொகை நிலைத்தொடர்

ஆ) தொகாநிலைத்தொடர்

இ) மரபுத்தொடர்

ஈ) உவமைத்தொடர்

Answer:

ஆ) தொகாநிலைத்தொடர்

Question 4.

தொகாநிலைத் தொடரின் வகைகள்……………………………

அ) 6

ஆ) 7

இ) 8

ஈ) 9

Answer:

ஈ) 9

Question 5.

விளியுடன் எது தொடர்வது விளித்தொடர் ஆகும்?

அ) பெயர்

ஆ) வினா

இ) வினை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

இ) வினை

Question 6.

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடர்வது……………………………

அ) எழுவாய்த்தொடர்

ஆ) விளித்தொடர்

இ) வினையெச்சத்தொடர்

ஈ) வினைமுற்றுத்தொடர்

Answer:

ஈ) வினைமுற்றுத்தொடர்

Question 7.

முற்றுப் பெறாத……………………………பெயர்ச்சொல்லைத் தொடர்வது பெயரெச்சத்தொடர் எனப்படும்.

அ) வினா

ஆ) எழுவாய்

இ) வினை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

Answer:

இ) வினை

Question 8.

……………………………உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்கள் ஆகும்.

அ) உவம்

ஆ) வேற்றுமை

இ) பண்பு

ஈ) வினை

Answer:

ஆ) வேற்றுமை

Question 9.

பொருத்திக் காட்டுக.

i) கட்டுரையைப் படித்தாள் – 1. உரிச்சொல் தொடர்

ii) அன்பால் கட்டினார் – 2. நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

iii) அறிஞருக்குப் பொன்னாடை – 3. மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

iv) சாலச் சிறந்தது – 4. இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத்தொடர்

அ) 4, 3, 2, 1

ஆ) 3, 4, 1, 2

இ) 2, 3, 1, 4

ஈ) 4, 2, 3, 1

Answer:

அ) 4, 3, 2, 1

Question 10.

பொருத்திக் காட்டுக.

i) காவிரி பாய்ந்தது – 1. வினையெச்சத்தொடர்

ii) நண்பா எழுது – 2. பெயரெச்சத்தொடர்

iii) கேட்ட பாடல் – 3. எழுவாய்த்தொடர்

iv) பாடி மகிழ்ந்த னர் – 4. விளித்தொடர்

அ) 3, 4, 2, 1

ஆ) 2, 1, 4, 3

இ) 4, 3, 2, 1

ஈ) 3, 2, 1, 4

Answer:

அ) 3, 4, 2, 1

Question 11.

இடைச்சொல் தொடரில் இடைச்சொல்லுடன் தொடர்வது……………………………

அ) பெயர், வினை

ஆ) வினா, விடை

இ) பெயர், வினா

ஈ) வினை, வினா

Answer:

அ) பெயர், வினை

Question 12.

மற்றொன்று என்பது……………………………

அ) வினையெச்சத்தொடர்

ஆ) வினைமுற்றுத்தொடர்

இ) இடைச்சொல் தொடர்

ஈ) உரிச்சொல் தொடர்

Answer:

இ) இடைச்சொல் தொடர்

Question 13.

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது……………………………

அ) இரட்டைக்கிளவி

ஆ) அடுக்குத்தொடர்

இ) இரட்டுறமொழிதல்

ஈ) உரிச்சொல் தொடர்

Answer:

ஆ) அடுக்குத்தொடர்]

Question 14.

கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி ஆகியன……………………………

அ) பெயரெச்சங்கள்

ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்

இ) கூட்டுநிலை வினையெச்சங்கள்

ஈ) வினையெச்சங்கள்

Answer:

ஆ) கூட்டுநிலைப் பெயரெச்சங்கள்

Question 15.

அன்பால் கட்டினார், அறிஞருக்குப் பொன்னாடை ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது

அ) வேற்றுமை உருபு

ஆ) எழுவாய்

இ) உவம உருபு

ஈ) உரிச்சொல்

Answer:

அ) வேற்றுமை உருபு

குறுவினா

Question 1.

தொகாநிலைத் தொடர் என்றால் என்ன?

Answer:

ஒரு தொடர் மொழியில் இரு சொற்கள் இருக்கும்.

அவற்றின் இடையில் சொல்லோ உருபோ இல்லாமல் அப்படியே பொருளை உணர்த்தும்.

இதுவே தொகாநிலைத் தொடர் எனப்படும்.

Question 2.

தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைப்படும்? அவை யாவை?

Answer:

தொகாநிலைத் தொடர்கள் ஒன்பது வகைப்படும். அவை:

எழுவாய்த் தொடர்

வேற்றுமைத் தொடர்

விளித்தொடர்

இடைச்சொல் தொடர்

வினைமுற்றுத் தொடர்

உரிச்சொல் தொடர்

பெயரெச்சத் தொடர்

அடுக்குத் தொடர்

வினையெச்சத் தொடர்

Question 3.

எழுவாய்த் தொடர் என்றால் என்ன? சான்றுகள் தருக.

Answer:

எழுவாயுடன் பெயர், வினை, வினா ஆகிய பயனிலைகள் தொடர்வது எழுவாய்த்தொடர்.

சான்று :

இனியன் கவிஞர் – பெயர் பயனிலை

காவிரி பாய்ந்தது – வினை பயனிலை

பேருந்து வருமா? – வினா பயனிலை

Question 4.

விளித்தொடர் என்றால் என்ன? சான்று தருக.

Answer:

விளியுடன் வினை தொடர்வது விளித்தொடர்.

சான்று: நண்பா எழுது.

Question 5.

வினைமுற்றுத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.

Answer:

வினைமுற்றுடன் ஒரு பெயர் தொடரும்.

வினைமுற்று முதலில் நின்று ஒரு பெயரைக் கொண்டு முடியும்.

சான்று : பாடினாள் கண்ணகி.

Question 6.

பெயரெச்சத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.

Answer:

முற்றுப் பெறாத வினை (எச்ச வினை) பெயர்ச் சொல்லைக் கொண்டு முடிவது பெயரெச்சத் தொடர் எனப்படும்.

சான்று  : கேட்ட பாடல் (கேட்ட – எச்சவினை, பாடல் – பெயர்ச்சொல்)

Question 7.

வினையெச்சத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.

Answer:

முற்றுப் பெறாத வினை (எச்சவினை) வினைச்சொல்லைக் கொண்டு முடிவது வினையெச்சத் தொடர் எனப்படும்.

சான்று  : பாடி மகிழ்ந்தனர்.

Question 8.

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன? சான்று தருக.

Answer:

வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடராகும்.

சான்று : : கட்டுரையைப் படித்தான்.

Question 9.

இடைச்சொல் தொடர் என்றால் என்ன? சான்றுடன் விளக்குக.

Answer:

இடைச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது இடைச்சொல் தொடர் ஆகும்.

சான்று :

மற்றொன்று – மற்று + ஒன்று

மற்று – இடைச்சொல்

ஒன்று – இடைச்சொல்லை அடுத்து நின்று பொருள் தரும் சொல்.

Question 10.

உரிச்சொல் தொடர் என்றால் என்ன? சான்று தந்து விளக்குக.

Answer:

உரிச்சொல்லுடன் பெயரோ வினையோ தொடர்வது உரிச்சொல் தொடர் ஆகும்.

சான்று : : சாலச் சிறந்தது

சால – உரிச்சொல்

சிறந்தது – உரிச்சொல்லைத் தொடர்ந்து சிறந்தது என்ற சொல் நின்று மிகச் சிறந்தது என்ற பொருளைத் தருகின்றது.

Question 11.

அடுக்குத் தொடர் என்றால் என்ன? சான்று தருக.

Answer:

ஒரு சொல் இரண்டு, மூன்று முறை அடுக்கி வரும்.

சான்று : : வருக! வருக! வருக!

(பிரித்தால் பொருள் தரும். உவகை, விரைவு, அச்சம், வெகுளி ஆகிய பொருள்களில் வரும். சொற்கள் தனித்தனியே நிற்கும்).

சிறுவினா

Question 1.

கூட்டுநிலைப் பெயரெச்சத்தை சான்றுடன் விளக்குக.

Answer:

கூட்டுநிலைப் பெயரெச்சம் :

ஒன்றிற்கு மேற்பட்ட எச்சங்கள் சேர்ந்து பெயரைக் கொண்டு முடிவது கூட்டுநிலைப் பெயரெச்சம்.

உருவாக்கம் :

வேண்டிய, கூடிய, தக்க, வல்ல முதலான பெயரெச்சங்களை, செய என்னும் வாய்பாட்டு வினையெச்சத்துடன் சேர்ப்பதன் மூலம் கூட்டுநிலைப் பெயரெச்சங்கள் உருவாகின்றன.

சான்று :: கேட்க வேண்டிய பாடல், சொல்லத் தக்க செய்தி.

Question 2.

வேற்றுமைத் தொகாநிலைத் தொடரைச் சில சான்றுகளுடன் விளக்குக.

Answer:

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் :

வேற்றுமை உருபுகள் வெளிப்பட அமையும் தொடர்கள் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.

சான்று :

இரண்டாம் வேற்றுமை உருபு ‘ஐ’

கட்டுரையைப் படித்தாள் – இத்தொடரில் ‘ஐ’ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்துள்ளது.

மூன்றாம் வேற்றுமை உருபு ‘ஆல்’

அன்பால் (ஆல்) கட்டினார் – இத்தொடரில் ‘ஆல்’ என்னும் மூன்றாம் வேற்றுமை உருபு வெளிப்பட – வந்துள்ளது.

நான்காம் வேற்றுமை உருபு ‘கு’

அறிஞருக்குப் பொன்னாடை – இத்தொடரில் ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபு வெளிப்பட வந்துள்ளது.